மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ரத்தம் செலுத்தப்பட்ட 12 முதல் 15 வயதுக்குட்பட்ட ஆறு சிறுவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட மருத்துவமனைகளில் அசுத்தமான ரத்தம் செலுத்தப்பட்டதே இதற்கு காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சிறுவனின் பெற்றோருக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மாநில அளவிலான குழு அமைக்கப்பட்டு, முதற்கட்ட அறிக்கையின் அடிப்படையில் ரத்த வங்கி பொறுப்பாளர் டாக்டர் தேவேந்திர படேல் மற்றும் இரண்டு ஆய்வக உதவியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஜனவரி முதல் மே மாத காலப்பகுதியில் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன. இது குறித்து விளக்கம் அளிக்குமாறு முன்னாள் சிவில் சர்ஜனுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மத்தியப் பிரதேசத்தில் ஏற்கனவே சுமார் 70,000 எச்.ஐ.வி நோயாளிகள் இருக்கும் சூழலில், ரத்தம் செலுத்தியதன் மூலம் சிறுவர்களுக்குத் தொற்று பரவியுள்ள இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
