மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ரக்ஷக் சௌக் பகுதியில், போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளை ஒரு வெளிநாட்டவர் துணிச்சலாகத் தடுத்து நிறுத்திய வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

அந்தப் பகுதியில் உள்ள நடைபாதையை (Footpath) ஆக்கிரமித்து, அதன் மேல் இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த நபர்களை அந்த வெளிநாட்டவர் நேருக்கு நேராக மறித்தார்.

அவருடன் மற்றொரு இந்திய குடிமகனும் இணைந்து, விதிகளை மீறி நடைபாதையில் புகுந்த வாகனங்களை மீண்டும் பிரதான சாலைக்குச் செல்லும்படி சைகை மூலம் எச்சரித்தனர்.

இந்தக் காட்சியைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்த வெளிநாட்டவரின் செயலைப் பாராட்டி வருகின்றனர். “நடைபாதையில் நடப்பவர்களுக்கே பாதுகாப்பு இல்லை” என்றும், “இந்தியர்களுக்குப் பொது அறிவு (Civic Sense) மிகவும் குறைவாக உள்ளது” என்றும் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க நடைபாதையில் ஏறும் வாகன ஓட்டிகளுக்கு இது ஒரு சிறந்த பாடம் எனப் பதிவிட்டுள்ளனர். அதேசமயம், ஒரு வெளிநாட்டவர் வந்து நமக்கு ஒழுக்கத்தைச் சொல்லித்தரும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருப்பது வருத்தமளிப்பதாகப் பல சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.