உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற அரை ஆண்டுத் தேர்வு வினாத்தாளில் இடம்பெற்ற எளிய கணக்குகள், தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

7 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கணிதத் தேர்வில், பல கேள்விகள் தவறாகக் கேட்கப்பட்டிருந்தன. உதாரணமாக, “4 கிலோ அரிசியின் விலை 420 ரூபாய் என்றால், 12 கிலோ அரிசியின் விலை எவ்வளவு?” என்ற கேள்விக்குச் சரியான விடையான 1,260 ரூபாய் என்பது ஆப்ஷன்களில்  கொடுக்கப்படவே இல்லை. இதேபோல், ஒரு செங்கோண முக்கோணத்தின் 90 டிகிரிக்கு எதிரே உள்ள பக்கம் எது என்ற கேள்விக்கு “கர்ணம்” என்ற சரியான பதில் வினாத்தாளில் இல்லை.

இந்தத் தவறுகளைக் கவனித்த மாணவர்கள் ஆசிரியர்களிடம் முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து, பிழையான கேள்விகளுக்கு முழு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

இருப்பினும், வினாத்தாள்களைத் தயாரிக்கும் குழுவின் கவனக்குறைவை ஆசிரியர்களும் சமூக ஆர்வலர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இத்தகைய தவறுகள் மாணவர்களின் தன்னம்பிக்கையைப் பாதிக்கும் என்றும், தேர்வு முறைகளில் கூடுதல் கவனம் தேவை என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இணையத்தில் இந்த வினாத்தாள் புகைப்படம் பகிரப்பட்டு, பலரும் கிண்டலாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.