தமிழக அரசியலில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கணக்குகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. “நான் மீண்டும் இணைந்தால் அதிமுகவில்தான் இணைவேன்” என்பதில் ஓபிஎஸ் மிகவும் பிடிவாதமாக இருக்கிறார். ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்போ அவரை மீண்டும் கட்சிக்குள் சேர்க்கும் எண்ணத்தில் துளியும் இல்லை எனத் திட்டவட்டமாகக் கூறிவிட்டது.
இந்தச் சூழலில், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ஓபிஎஸ்ஸைத் தொடர்ந்து தன் பக்கம் இழுக்க முயற்சி செய்து வருகிறார். ஆனால், அதற்கும் ஒப்புக்கொள்ளாமல் ஓபிஎஸ் முரண்டு பிடித்து வருகிறார். இந்நிலையில் தான், காரைக்காலுக்கு அரசு முறைப் பயணமாக வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகத்தில் பாஜக தலைமையிலான NDA கூட்டணியை வலுப்படுத்த முக்கிய அசைன்மென்ட் ஒன்றை வழங்கியிருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன.
ஓபிஎஸ்ஸை மீண்டும் NDA கூட்டணியில் ஒருங்கிணைக்கும் பொறுப்பு தமிழக பாஜக நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது ஓபிஎஸ்ஸை அதிமுகவுக்குள் கொண்டு செல்லுமா அல்லது தனிப் பாதையில் பயணிக்க வைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
