தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே திமுக – காங்கிரஸ் கூட்டணிக்குள் “மதுரை வடக்கு” தொகுதி விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. மதுரையில் இன்று (பிப்.15) நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பேசிய விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், “மதுரை வடக்கு தொகுதியை இந்த முறை காங்கிரஸ் வாங்கியே தீர வேண்டும். அந்தத் தொகுதியில் காங்கிரஸ் உறுப்பினர் தான் எம்.எல்.ஏ-வாகப் போய் அமர வேண்டும் என்பது நமது லட்சியம்” என அதிரடியாக முழங்கினார். ஏற்கனவே அந்தத் தொகுதி திமுக எம்.எல்.ஏ-வான கோ.தளபதி, மாணிக்கம் தாகூரை மிகக் கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக தாகூர் இப்போதே அந்தத் தொகுதியைக் குறிவைத்துள்ளார்.
இந்த விவகாரம் திமுக மற்றும் காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. “ஆட்சியில் பங்கு” கேட்டு ஏற்கனவே காங்கிரஸ் நிர்வாகிகள் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், தற்போது சிட்டிங் எம்.எல்.ஏ இருக்கும் தொகுதியையே மாணிக்கம் தாகூர் கேட்டிருப்பது திமுக தலைமைக்குத் தலைவலியை உருவாக்கியுள்ளது. “அதிகாரத் திமிருடன் இருப்பவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும்” என தாகூர் முன்னர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பே, மதுரையில் ஏற்பட்டுள்ள இந்த நேரடி மோதல் வரும் நாட்களில் இன்னும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
