சீனாவில் சில பள்ளி மாணவர்கள் கோலா பாட்டில்களை வைத்து ராக்கெட் ஒன்றை உருவாக்கி பறக்கவிட்ட காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிறுவர்களின் சிந்தனை திறன், தொழில்நுட்ப அறிவு ஆகியவற்றை வெளிப்படுத்தும் இந்த வீடியோ, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. வீடியோவில், 2-நிலை நீர் அழுத்தம் பயன்படுத்தி அவர்கள் உருவாக்கிய ராக்கெட் கோகா பாட்டிலில் இருந்து பறப்பதை காணலாம். அது உண்மையான ராக்கெட் போலவே உயரம் எட்ட, பின்னர் மேல் பகுதி பிரிந்து பாராசூட்டின் உதவியுடன் மெதுவாக தரையிறங்குகிறது.

இந்த அருமையான செயலை சிறுவர்கள் வீட்டுப் பொருட்களைப் பயன்படுத்தியே செய்து காட்டியுள்ள நிலையில், சீனாவின் எதிர்காலம் எவ்வளவு பிரகாசமாக இருக்கப் போகிறதென்பதற்கான சிறந்த உதாரணமாக இது விளங்குகிறது. வீடியோவில் குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியுடன் செயலில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததை காணலாம். ட்ரோன் கேமரா மற்றும் தரைக் கோணங்களில் படம் பிடிக்கப்பட்ட இந்த வீடியோ, பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

 

இக்காணொளியை @TansuYegen என்ற  எக்ஸ் பக்கம் பகிர்ந்துள்ளது. இதுவரை லட்சக்கணக்கானோர் இதை லைக் செய்துள்ளனர், மில்லியன் கணக்கானோர் பார்த்துள்ளனர். பலரும் “இந்த சிறுவர்கள் அற்புதங்களைச் செய்து காட்டியிருக்கிறார்கள்” எனக் கமெண்ட் செய்து வருகிறார்கள். “இந்தக் குழந்தைகளுக்கு எவ்வளவு பாராட்டுகள் சொன்னாலும் போதாது” என சிலர் தெரிவித்துள்ள நிலையில், “இவர்கள் தான் எதிர்காலத்தின் விஞ்ஞானிகள்” என பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.