தாய்லாந்து நாட்டின் பௌத்த மத ஸ்தாபனங்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், விலவான் எம்ஸவாட் என்ற 35 வயது பெண்மணி பன்முக மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ‘மிஸ் கால்ஃப்’ என்ற புனைப்பெயரில் அறியப்பட்ட இவரால் பல உயர்மட்ட பௌத்த சந்நியாசிகள் பாலியல் உறவுகளில் ஈடுபடுத்தப்பட்டு பின்னர் அந்த விடியோக்களால் மிரட்டப்பட்டு கோடிக்கணக்கான பணம் பறிக்கப்பட்டது. பாங்காக் அருகே நோன்தபுரியில் உள்ள உயர்தர குடியிருப்பில் தாய்லாந்து காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், விலவான் கைது செய்யப்பட்டதோடு, அவருடைய மொபைல்களில் 80,000-க்கும் மேற்பட்ட அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்கள் மீட்கப்பட்டுள்ளன.

விசாரணை அதிகாரிகள் கூறுகையில், குறைந்தது 9 பௌத்த சந்நியாசிகள் இதில் ஈடுபட்டுள்ளனர் என்றும், மூன்று வருடங்களில் இந்த கடுமையான மிரட்டல் வழி மோசடி வழக்கில் 385 மில்லியன் பாட்டுக்கும் மேற்பட்ட பணம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.102 கோடி) பறிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். பல்வேறு பிரபல மடாதிபதிகள், தங்கள் கோயிலுக்கு வழங்கப்பட்ட நன்கொடை பணங்களை முறைகேடாக பயன்படுத்தி இந்த மடத்தில் பணம் வழங்கியுள்ளனர். இதில் சிக்கியவர்களில் பலர் துறவுத்துறையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். பாங்காக் நகரத்தில் உள்ள வாட் ட்ரை தோட்சதேப் என்ற மடத்திலிருந்த சந்நியாசி ஒருவர், மிரட்டலால் தவிர்க்க முடியாமல் துறவுத்துறையை விட்டு வெளியேறியிருக்கிறார். அதே சந்நியாசியுடன் ஒரு குழந்தை பெற்றிருக்கிறேன் என விலவான் தெரிவித்துள்ளதும் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொடுமையான பிரச்னையின் பின்னணி, தாய்லாந்து அரசாங்கத்தையே பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. புத்த மடங்களில் நிலவும் தீய நடைமுறைகள் குறித்து விசாரணை நடத்த புதிய குழு அமைக்கப்படும் என தேசிய காவல் துறை தலைவர் கிட்ராட் பான்பெத் உறுதி அளித்துள்ளார். மன்னர் மகா வஜிரலொங்கோர்ன் தங்கள் 73வது பிறந்த நாளையொட்டி ஏற்பாடான விழாவுக்கு 80க்கும் மேற்பட்ட சந்நியாசிகளுக்கு அனுப்பியிருந்த அழைப்புகளை ரத்து செய்ததோடு, “சமூகத்தின் மனச்சோர்வுக்கு காரணமான ஒழுக்கக்கேடுகள்” என கண்டித்துள்ளார்.

இதேநேரம், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், “சந்நியாசிகளுடன் பாலியல் உறவு வைத்த பெண்களையும் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்” என்ற பரிந்துரையை முன்வைத்துள்ளனர். இது மனித உரிமை ஆர்வலர்களிடையே கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது. “ஆசாரங்களை மீறியதற்குப்  சந்நியாசிகளே பொறுப்பு ஏற்க வேண்டும்” என்று சமூக ஊடகங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன. கடந்த காலத்திலும் பல புத்தமடங்களில் பண மோசடி, கும்பல் வியாபாரம், பாலியல் குற்றங்கள் போன்ற பிரச்சனைகள் எழுந்திருந்தாலும், இப்போது சிக்கியுள்ளவர்கள் உயர்மட்டத்தில் இருப்பது தான் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தில் 90% மக்கள் புத்த மதத்தை பின்பற்றுகிறார்கள். நாட்டில் தற்போது 2 லட்சம் சந்நியாசிகளும், 85,000 பாடசாலை துறவிகளும் உள்ளனர். பொதுமக்கள் “சந்நியாசிகள் மீது நம்பிக்கையை இழக்கலாம், ஆனால் புத்தரின் போதனைகளில் நம்பிக்கை என்றும் நீடிக்கும்” என தெரிவிக்கின்றனர். தற்போது பலர் கோவிலுக்கு நன்கொடைகள் அளிப்பதைவிட, பள்ளி, மருத்துவமனை உள்ளிட்ட சமூக வசதிகளுக்கே நேரடியாக உதவியை திருப்பியுள்ளனர்.