இந்தூர் தேவி அகில்யா விஸ்வவித்யாலயா பல்கலைக்கழகத்தின் ஐ.இ.டி ராமானுஜம் ‘பி’ விடுதியில் தங்கியிருந்த இறுதியாண்டு மாணவர்கள், நள்ளிரவில் விடுதிப் பொருட்களை அடித்து உடைத்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சனிக்கிழமை நள்ளிரவு தொடங்கி அதிகாலை 4 மணி வரை நீடித்த இந்த ஆட்டத்தின்போது, மாணவர்கள் சட்டையின்றி நடனமாடியும், முதல் மாடியில் இருந்து கீழே நின்றிருந்தவர்கள் மீது வாளிகளால் தண்ணீரை ஊற்றியும் அராஜகம் செய்துள்ளனர்.

மேலும், விடுதியில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலிகள், மேஜைகள், தண்ணீர் தொட்டி மற்றும் ஜன்னல் கண்ணாடிகள் போன்றவற்றை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர். இந்த வன்முறைச் சம்பவத்தின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி, மாணவர்களின் ஒழுங்கீனம் குறித்தும், விடுதி நிர்வாகத்தின் அலட்சியம் குறித்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாகக் களத்தில் இறங்கி, ரகளையில் ஈடுபட்ட மாணவர்களை அடையாளங்காணும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது.

“>

 

தவறு செய்த மாணவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விடுதிப் பொருட்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்கான அபராதம் அவர்களிடம் இருந்தே வசூலிக்கப்படும் என்றும் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ராகேஷ் சிங்காய் மற்றும் துறைத் தலைவர் டாக்டர் பிரதோஷ் பன்சால் ஆகியோர் எச்சரித்துள்ளனர்.