ஜார்க்கண்ட் மாநிலம் கிரிடி மாவட்டத்தில், சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இளம் பெண் ஒருவரின் சடலத்திற்கு, அவரைக் கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்ட மணமகன் இறுதிச்சடங்கின் போது தாலி கட்டிய விசித்திரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனிஷ் முர்மு என்பவருக்கும் அந்தப் பெண்ணுக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, இருவரும் மனிஷின் வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். பெண்ணின் பெற்றோர் திருமணத்தை விரைவில் நடத்துமாறு வற்புறுத்திய நிலையில், திடீரென அந்தப் பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லை என்று மனிஷ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
உடனடியாகப் பெற்றோர் அங்கு வந்து பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மனிஷ் தனது மகளைக் கொடூரமாகத் தாக்கி, திருமணத்தைத் தவிர்ப்பதற்காகக் கட்டாயப்படுத்தி விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டதாகப் பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து போலீசார் மனிஷைக் கைது செய்தனர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு இரு குடும்பத்தினரும் சடலத்தை வாங்க மறுத்ததால், போலீசாரே தலையிட்டுப் பெண்ணின் உடலை மனிஷின் கிராமத்திற்குக் கொண்டு சென்றனர்.
அங்கு போலீஸ் பாதுகாப்போடு அழைத்து வரப்பட்ட குற்றவாளியான மனிஷ், உயிரிழந்த தனது காதலியின் நெற்றியில் குங்குமம் வைத்து, மற்ற திருமண சடங்குகளைச் செய்த பின்னரே அவரது உடலுக்குத் தீ மூட்டியுள்ளார். இந்த அதிர்ச்சியூட்டும் வன்முறைச் சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
