உத்தரப்பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு இனிப்புக்கடையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையின் போது கைப்பற்றப்பட்ட கலப்பட இனிப்புகளை பொதுமக்கள் குப்பைத் தொட்டியிலிருந்து போட்டி போட்டுக்கொண்டு அள்ளிச் சென்ற அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

மேலும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு கலப்பட உணவுகளைத் தடுக்கும் நோக்கில் மீனாட்சி சாலையில் உள்ள அந்த கடையிலிருந்து விற்பனைக்குத் தகுதியற்ற மற்றும் உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய இனிப்புகளை அங்கிருந்த குப்பைத் தொட்டியில் கொட்டினர். ஆனால், அந்த இனிப்புகள் பாதுகாப்பற்றவை என்பதை உணராமல், அங்கிருந்த மக்கள் முண்டியடித்துக்கொண்டு பெட்டி பெட்டியாக அந்த அழுக்கடைந்த இனிப்புகளைத் திருடிச் சென்றனர்.

“>

இந்தச் சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் மெத்தனப் போக்கு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. விதிகளின்படி, கைப்பற்றப்பட்ட கலப்பட உணவுகளைக் குழிதோண்டிப் புதைத்தோ அல்லது முறையாக அழித்தோ இருக்க வேண்டும்.

ஆனால் அதிகாரிகள் அவ்வாறு செய்யாமல் அலட்சியமாகக் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டுச் சென்றதே மக்கள் அதனை எடுத்துச் செல்லக் காரணமாக அமைந்தது. மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இத்தகைய கலப்படப் பொருட்களை முறையாக அப்புறப்படுத்தத் தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.