சமூக வலைதளங்களில் மக்களைச் சிரிக்க வைக்கப் பகிரப்படும் ‘பிராங்க்’ (Prank) எனப்படும் குறும்பு வீடியோக்கள், சில நேரங்களில் விபரீதமாகவும் முடிவதுண்டு. அந்த வகையில், பாம்பைப் போன்ற கயிற்றைக் காட்டி வழிப்போக்கர்களைப் பயமுறுத்திய இளைஞர் ஒருவரின் வீடியோ தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

பாம்பு என நம்பி ஓடிய மக்கள் வைரலாகி வரும் அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் கையில் நீண்ட கயிறு ஒன்றை வைத்துள்ளார். அது பார்ப்பதற்கு அச்சு அசலாகப் பாம்பைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் உள்ள தெருவில் செல்லும் அவர், அந்தப் போலிப் பாம்பை திடீரென வழிப்போக்கர்கள் மீது நீட்டுகிறார்.

இதைப் பார்க்கும் பெண்கள், முதியவர்கள் மற்றும் இளைஞர்கள் அது நிஜமான பாம்பு எனத் தவறாக நினைத்து அலறியடித்துக் கொண்டு ஓடுகின்றனர். ஒரு முதியவர் பயத்தில் நிலைதடுமாறிப் பின்வாங்குவதும், பெண்கள் தப்பிக்க முயற்சிப்பதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. மக்கள் பயப்படுவதைக் கண்டு அந்த இளைஞர் சிரிக்கத் தொடங்கும்போதுதான், அது வெறும் கயிறு என்பது அவர்களுக்குத் தெரிகிறது.

சமூக வலைதளங்களில் வைரல் சுமார் 31 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவை,  (@ArunKosli) என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்” என்ற நகைச்சுவைத் தலைப்புடன் பகிரப்பட்ட இந்த வீடியோவை, இதுவரை 22,000-க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இந்த வீடியோவிற்குப் பலதரப்பட்ட கருத்துகள் வந்தவண்ணம் உள்ளன. சிலர் இதை நகைச்சுவையாகப் பார்த்தாலும், பெரும்பாலானோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் வயதானவர்களை இப்படிப் பயமுறுத்துவது ஆபத்தானது, இவரைச் சிறையில் அடைக்க வேண்டும்” என ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். வேடிக்கைக்கும் விபரீதத்திற்கும் இடையிலான கோடு மிகவும் மெல்லியது என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. ஒருவரைப் பயமுறுத்திச் சிரிக்க வைப்பது எளிதாக இருக்கலாம், ஆனால் இதய நோய் உள்ளவர்களுக்கோ அல்லது முதியவர்களுக்கோ இது போன்ற செயல்கள் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இத்தகைய வீடியோக்களை உருவாக்குவோர் பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.