ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில், காதலனை நம்பி வீட்டை விட்டு வெளியேறிய 23 வயது இளம்பெண், அடுத்தடுத்து இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கட்டிடத்தின் 4-வது மாடியிலிருந்து கீழே தள்ளிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட பெண்ணின் காதலன் மற்றும் மற்றொரு நபர் என இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஜகத்சிங்பூர் எஸ்பி அங்கித் குமார் வர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது, பாதிக்கப்பட்ட பெண் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி, தனது காதலனுடன் திருமணம் செய்துகொண்டு வாழும் கனவுடன் வீட்டை விட்டு வெளியேறினார். கோவிலுக்கு வருமாறு அழைத்த காதலன், அவரைத் திருமணம் செய்யாமல் ஓர் ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், அந்தப் பெண்ணை ரஹ்மா பேருந்து நிலையத்தில் தவிக்கவிட்டுவிட்டு அவர் தப்பியோடிவிட்டார்.
பேருந்து நிலையத்தில் அதிர்ச்சியுடன் காத்திருந்த அந்தப் பெண்ணை, ஜார்க்கண்டைச் சேர்ந்த மோட்டார் சைக்கிளில் வந்த மற்றொரு நபர் சந்தித்துள்ளார். அவர் உதவி செய்வதாக அந்தப் பெண்ணை நம்ப வைத்துள்ளார். பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணை தனது வாடகை வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்ற அந்த நபர், அங்கு அவரை மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், குற்றத்தை மறைக்க அந்தப் பெண்ணை 4-வது மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில் அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மறுநாள் காலை அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பெண்ணின் சகோதரர் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு விரைந்து நீதி கிடைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
