கோயம்புத்தூர் மாவட்டத்தில் காவலராகப் பணியாற்றி விபத்தில் உயிரிழந்த வைகுண்டராமன் என்பவரின் மனைவி கிருஷ்ணவேணி (36). கணவரின் மறைவுக்குப் பின் கருணை அடிப்படையில் வாரிசு வேலை பெற்று, தற்போது ஓசூர் அருகே உள்ள காவல் நிலையம் ஒன்றில் கணினி தரவு உள்ளீட்டாளராக பணியாற்றி வருகிறார்.
கடந்த மே 16-ஆம் தேதி மாலை பணி முடிந்து பேருந்து மூலம் தனது ஊருக்குச் சென்ற கிருஷ்ணவேணி, பேருந்து நிறுத்தத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி (37) என்பவர் தனது டெம்போ டிராவல்லர் வாகனத்தில் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி கிருஷ்ணவேணியை ஏற்றியுள்ளார். சொந்த ஊர்க்காரர் என்ற நம்பிக்கையில் ஏறிய அந்தப் பெண்ணை, மூர்த்தி வாகனத்திற்குள் வைத்துத் தாக்கி, தவறான தொடுதலில் ஈடுபட்டுத் துன்புறுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கிருஷ்ணவேணி, கூச்சலிட்டு அவரைத் தள்ளிவிட்டு வாகனத்தில் இருந்து தப்பித்துத் தனது வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து கிருஷ்ணவேணி தனது பார்வை இழந்த தாயார் மற்றும் உறவினர்களிடம் கூறி, மே 17 அன்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி, குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட மூர்த்தியின் டெம்போ டிராவல்லர் வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து தலைமறைவாக உள்ள மூர்த்தியைப் பிடிக்கப் போலீசார் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கணவனை இழந்து, குறைந்த ஊதியத்தில் குடும்பத்தைக் காப்பாற்றி வரும் கிருஷ்ணவேணி, “சொந்த ஊரைச் சேர்ந்த, அண்ணன் என்று அழைத்த நபரே தனக்குத் துரோகம் இழைத்துவிட்டதாக” மனமுடைந்து கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.
மேலும், போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து குற்றவாளியைக் கைது செய்ய வேண்டும் என்றும், தன்னைப்போல வேறு எந்தப் பெண்ணுக்கும் இந்த நிலை வரக்கூடாது என்றும் அவர் உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.
