10 ஐசிசி கோப்பைகளை வென்று கிரிக்கெட் உலகின் அசைக்க முடியாத சக்தியாக இருந்த ஆஸ்திரேலியா, தற்போது ஒரு மோசமான சரிவைச் சந்தித்துள்ளது. எப்போதும் உலகக்கோப்பை என்று வந்துவிட்டால் அடி தூள் கிளப்பும் ஆஸ்திரேலியா, இந்த 2026 டி20 உலகக்கோப்பையில் நிஜமாகவே தடுமாறி வெளியேறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஸ்டார்க், ஸ்மித், ஹசல்வுட் போன்ற சீனியர் வீரர்கள் ஓய்வு பெறும் நிலையில் இருப்பதும், அவர்களுக்கு இணையான இளம் வீரர்களை ஆஸ்திரேலியா இன்னும் கண்டறியாததுமே இந்த வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
முன்னாள் வீரர்கள் மார்க் வா மற்றும் இயன் ஹீலி ஆகியோர் தவறான அணித்தேர்வைக் குற்றம் சாட்ட, இந்திய வீரர் அஸ்வின் “ஆஸ்திரேலியா உலகக்கோப்பைக்குத் தயாராகவே வரவில்லை” எனப் பொட்டில் அடித்தார் போல் கூறியுள்ளார். வேகப்பந்து வீச்சு மற்றும் ஸ்பின் துறையில் அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாததால், ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் ஒரு மிகப்பெரிய ‘ஓட்டை’ விழுந்துள்ளது. உடனடியாகச் சரியான வீரர்களைக் கண்டறியவில்லை என்றால், அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலியாவால் ஒரு கோப்பையைக்கூடத் தொட முடியாது என கிரிக்கெட் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
