கிரிக்கெட் உலகில் 6 ஒருநாள் உலகக் கோப்பைகள், 2 சாம்பியன்ஸ் டிராபி, ஒரு டி20 உலகக் கோப்பை மற்றும் ஒரு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) என ஐசிசி கோப்பைகளை வாரிக்குவித்த ஆஸ்திரேலிய அணி, தற்போது ஒரு கோப்பையைக் கூட வெல்ல முடியாமல் திணறி வருவது ‘கர்மா’வின் விளைவு என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கடந்த 2023-ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. அந்த வெற்றியின் கொண்டாட்டத்தின் போது, ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ், உலகக் கோப்பையின் மீது தனது இரு கால்களையும் வைத்து அமர்ந்திருந்த புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களின் கனவாகவும், விளையாட்டு உலகின் உயரிய மரியாதையாகவும் கருதப்படும் உலகக் கோப்பையை காலால் மிதித்து அவமதித்தது கிரிக்கெட் ஆர்வலர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. “கோப்பையின் மதிப்பு தெரியாதவர்களுக்குத் தான் இது போன்ற தலைக்கனம் வரும்” என அப்போது விமர்சிக்கப்பட்டது.

2023 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு, ஆஸ்திரேலிய அணிக்கு இறங்குமுகமே தொடங்கியுள்ளது. அந்த வெற்றிக்குப் பிறகு விளையாடிய எந்தவொரு ஐசிசி தொடரிலும் ஆஸ்திரேலியாவால் சாம்பியன் பட்டம் வெல்ல முடியவில்லை.

அதன்படி 2024 டி20 உலகக் கோப்பையிஐஅ ஏமாற்றத்துடன் வெளியறியது. 2025 சாம்பியன்ஸ் டிராபியில் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வி எனத் தொடர்ந்து இறங்கு முகம்தான்.

இதனைத் தொடர்ந்து 2026 டி20 உலகக் கோப்பை தற்போது நடைபெற்று வரும் தொடரில், ஜிம்பாப்வே போன்ற அணிகளிடம் கூட தோற்றுத் தொடரை விட்டு வெளியேறியுள்ளது ஆஸ்திரேலியாவின் வீழ்ச்சியை உறுதிப்படுத்தியுள்ளது.

மிட்செல் மார்ஷ் செய்த அந்த ஒரு தவறுக்காக ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணியும் இப்போது தண்டனையை அனுபவித்து வருவதாக ரசிகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். “வெற்றி என்பது திறமையால் வருவது, ஆனால் அந்த வெற்றியைத் தக்கவைப்பது பணிவால் மட்டுமே சாத்தியம்” என்பதை ஆஸ்திரேலியா மறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

அன்று உலகக் கோப்பையை காலால் மிதித்த ஆஸ்திரேலியா, இன்று ஒரு சிறிய கோப்பையாவது கிடைக்குமா என ஏங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதுதான் ‘கர்மா’ (Karma) என கிரிக்கெட் உலகம் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகிறது.