ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை 2026 தொடரில், இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் வெறும் 80 பந்துகளில் 175 ரன்கள் விளாசி இந்தியாவிற்கு கோப்பையை வென்று தந்த 14 வயது வைபவ் சூர்யவன்ஷி, இப்போது படிப்பிலும் ஒரு ‘அதிரடி’ காட்டியுள்ளார்.

சிபிஎஸ்இ (CBSE) 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி 17-ம் தேதி தொடங்கிய நிலையில், வைபவ் சூர்யவன்ஷி முதல் நாள் தேர்வை எழுத வரவில்லை என்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவர் படிக்கும் போதார் இன்டர்நேஷனல் பள்ளியின் முதல்வர் என்.கே. சின்ஹா கூறுகையில், “வைபவ் இன்று தேர்வு எழுத வரவில்லை, அவருக்கு ‘ஆப்சென்ட்’ (Absent) போடப்பட்டுள்ளது” என உறுதிப்படுத்தியுள்ளார்.

உலகக் கோப்பையில் 439 ரன்கள் குவித்து ‘பிளேயர் ஆஃப் தி டோர்னமென்ட்’ விருது வென்ற வைபவ், தற்போது ஐபிஎல் 2026 தொடருக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள நாக்பூர் சென்றுள்ளதே இந்தத் தேர்வைத் தவறவிட்டதற்குக் காரணம் எனத் தெரிகிறது. “அவருக்கு கிரிக்கெட் போன்ற பெரிய பொறுப்புகள் இருப்பதால் வராமல் இருந்திருக்கலாம், அடுத்தடுத்த தேர்வுகளில் அவர் பங்கேற்பார் என நம்புகிறோம்” என்று பள்ளி முதல்வர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.