உலக கிரிக்கெட்டில் பல தசாப்தங்களாக ‘அசைக்க முடியாத சக்தி’யாகத் திகழ்ந்த ஆஸ்திரேலிய அணி, தற்போது ஒரு இருண்ட காலத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்களும் முன்னாள் வீரர்களும் கவலை தெரிவித்துள்ளனர். 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரிலிருந்து அந்த அணி வெளியேறிய விதம், ஆஸ்திரேலியாவின் ‘டிரான்சிஸன்’ காலத்தின் பலவீனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
6 ஒருநாள் உலகக்கோப்பைகள், 2 சாம்பியன்ஸ் டிராபி, 1 டி20 உலகக்கோப்பை, 1 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என மொத்தம் 10 ஐசிசி கோப்பைகளை வென்று உலக கிரிக்கெட்டின் சிம்மாசனத்தில் ஆஸ்திரேலியா அமர்ந்துள்ளது. இருதரப்புத் தொடர்களில் சொதப்பினாலும், உலகக்கோப்பை என்று வந்துவிட்டால் ‘சாம்பியன்’ ஆட்டத்தை வெளிப்படுத்துவது ஆஸ்திரேலியாவின் வழக்கம். ஆனால், 2026 உலகக்கோப்பை தோல்வி, அந்த பிம்பத்தை உடைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுவது, அனுபவம் வாய்ந்த வீரர்களின் ஓய்வு. குறிப்பாக மிட்செல் ஸ்டார்க், ஸ்டீவ் ஸ்மித், ஹசல்வுட், நாதன் லயன், மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டொய்னிஸ் போன்ற நட்சத்திர வீரர்கள் தங்கள் வாழ்நாளின் கடைசி கிரிக்கெட் கட்டத்தில் உள்ளனர். அடுத்த வரிசையில் உள்ள பேட் கம்மின்ஸ், ஆடம் சாம்பா, டிராவிஸ் ஹெட் ஆகியோரும் நீண்ட காலம் விளையாட முடியாது.
அவர்களுக்கு மாற்றாக இளம் வீரர்களைக் கண்டறிவதில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கோட்டை விட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. வேகப்பந்துவீச்சு மற்றும் சுழற்பந்துவீச்சு ஆகிய இரண்டு துறைகளிலும் தகுந்த மாற்று வீரர்கள் இல்லாதது கவலைக்கிடமாக உள்ளது.
ஆஸ்திரேலியாவின் தோல்வி குறித்து முன்னாள் வீரர்கள் மார்க் வா மற்றும் இயன் ஹீலி கூறுகையில், “தவறான அணித்தேர்வும், வீரர்களின் காயமுமே அணியை நிலைகுலையச் செய்துவிட்டன” என்றனர். இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இதுபற்றிக் கூறுகையில், “ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பைக்குத் தயாராகாமல் வந்தது போலத் தெரிந்தது. அவர்களின் எதிர்காலம் இப்போது கேள்விக்குறியாகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் சமீபத்திய ஆஷஸ் தொடரில் கூட, கம்மின்ஸ் மற்றும் ஹசல்வுட்டுக்கு மாற்றாக 36 வயதுடைய வீரர்களே களமிறக்கப்பட்டனர். இது ஆஸ்திரேலியாவின் ‘பெஞ்ச் ஸ்ட்ரென்த்’ எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது. இதே நிலை நீடித்தால், அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலியாவால் எந்தவொரு ஐசிசி கோப்பையையும் வெல்ல முடியாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
