இந்தியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, தனது கிரிக்கெட் வாழ்வின் மீள் எழுச்சிக்குத் தனது காதலி மஹிகா சர்மா தான் முக்கியக் காரணம் எனத் தெரிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர், தனக்குள் இருக்கும் கிரிக்கெட் ஆர்வத்தைத் தூண்டியதில் மஹிகாவிற்குப் பெரும் பங்கு இருப்பதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், “எனக்குள் எப்போதும் ஒரு குழந்தை இருக்கிறது; அதற்குப் பந்துவீச்சின் மீது அதிக ஈடுபாடு உண்டு. பந்துவீசும் போது எனக்கு மிகுந்த நம்பிக்கை பிறக்கும், ஆனால் மனதிற்கு மிகவும் பிடித்தது பேட்டிங் தான். எனக்குள் இருந்த அந்த விளையாடும் ஆர்வத்தை மீண்டும் மீட்டெடுக்க மஹிகா சர்மா தான் முக்கியக் காரணமாக இருந்தார்” எனத் தனது காதலியைப் பாராட்டியுள்ளார். மைதானத்திற்கு வெளியேயும் இவர்களது ஜோடி ரசிகர்களிடையே தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
ஹர்திக் பாண்டியா நடாஷா என்ற மாடல் அழகியை திருமணம் செய்த நிலையில் அவர்களுக்கு அகஸ்தியா பாண்டியா என்ற ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. மேலும் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில் தற்போது இருவருமே வேறு வேறு நபர்களுடன் டேட்டிங் செய்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
