கிரிக்கெட் உலகில் ‘தோனி’ என்பது வெறும் பெயரல்ல, அது கோடிக்கணக்கான ரசிகர்களின் உணர்வு. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆனாலும், இன்றும் மைதானங்களிலும் ரசிகர்களின் மனதிலும் அவரது பெயர் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது. 949 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்பு கொண்டிருந்தாலும், துளியும் தலைக்கனம் இல்லாத அவரது எளிமையே ரசிகர்களைக் கட்டிப்போட்டுள்ளது.

ஜூலை 7, 1981-இல் பீகாரின் ராஞ்சியில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் தோனி. கிரிக்கெட்டில் ஜொலிக்கும் முன், இந்திய ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக (TTE) பணியாற்றியவர். அந்த ஆரம்பகால கஷ்டங்களே அவரை இன்றும் தரை இறங்கிய மனிதராக  வைத்திருக்கின்றன. ஆடம்பரமான விளம்பரங்களை விட, அமைதியான மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கையையே அவர் விரும்புகிறார்.

சொந்தமாகப் பண்ணை வீடு வைத்துள்ள தோனி, அங்கு விவசாயம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார். பலமுறை அவரே டிராக்டர் ஓட்டி நிலத்தை உழுவதைப் பார்க்க முடிகிறது. விலையுயர்ந்த கார்கள் அவரிடம் இருந்தாலும், அவற்றை அவரே சுத்தம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். “எந்த வேலையும் சிறியது கிடையாது; சொந்த வேலையைச் செய்ய வெட்கப்படத் தேவையில்லை” என்பதே அவரது தாரக மந்திரம்.

தோனியின் குடும்ப வாழ்க்கை ஒரு சினிமா போன்றது. 2010-இல் அவர் சாக்ஷியை மணந்தார். ஒரு ஹோட்டலில் வரவேற்பாளராகப் பணியாற்றிய சாக்ஷியைச் சந்தித்தது முதல், அவர்களது காதல் பயணம் தொடங்கியது. 2015-இல் இவர்களுக்கு ஸிவா (Ziva) என்ற மகள் பிறந்தார். சமூக வலைதளங்களில் சாக்ஷி பகிரும் புகைப்படங்களில், ஒரு சாதாரண குடும்பத் தலைவராக தோனி காட்டும் எளிமை அனைவரையும் வியக்க வைக்கிறது.

2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி, நாடு சுதந்திர தினத்தைக் கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார். அந்தச் செய்தி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவர் ஓய்வு பெற்று இத்தனை காலமான பின்பும், இக்கட்டான சூழலில் இந்திய அணி தடுமாறும் போதெல்லாம் தோனியின் தலைமைத்துவமும், ஆட்டத்தை முடித்து வைக்கும் திறனும் இன்றும் ஏக்கத்துடன் நினைவு கூரப்படுகிறது.