2026-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றோடு ஆஸ்திரேலிய அணி வெளியேறியுள்ளது அந்நாட்டு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை அணியில் சேர்க்காதது மிகப்பெரிய தவறு என முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர்.
மழை மற்றும் சில கணக்கீடுகள் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக அமையாததால், அந்த அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது. ஆஸ்திரேலிய அணியின் இந்தத் தோல்விக்கு, அந்நாட்டுத் தேர்வுக்குழுவின் தவறான முடிவுகளே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தத் தொடரில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் ஆஸ்திரேலிய பேட்டர்கள் திணறினர். பந்து புதியதாக இருக்கும்போது அதிரடியாக ஆடிய வீரர்கள், ஆட்டம் நிதானமடையும் போது விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். இந்தச் சூழலில், சுழற்பந்து வீச்சை லாவகமாகக் கையாளும் ஸ்டீவ் ஸ்மித் அணியில் இல்லாதது ஆஸ்திரேலியாவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறுகையில், “ஸ்டீவ் ஸ்மித் ஏன் ஆரம்பத்திலேயே அணியில் சேர்க்கப்படவில்லை என்பது எனக்குப் புரியவில்லை. சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதிலும், வேகப்பந்து வீச்சை திசை திருப்புவதிலும் அவர் கில்லாடி. பிக் பாஷ் லீக் தொடரில் அவர் ஆடிய விதம் அற்புதம். அவரைத் தேர்வு செய்யாததன் மூலம் ஆஸ்திரேலியா ஒரு பெரிய வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டது” எனச் சாடியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பயிற்சியாளர் டேரன் லேமன் இதுகுறித்துக் கூறுகையில், “அதிரடியாக ஆடும் வீரர்களை மட்டுமே நம்பி களமிறங்கியது தவறு. துணைக்கண்டம் போன்ற சூழல்களில் சுழற்பந்து வீச்சை நிதானமாக எதிர்கொள்ள ஸ்மித் போன்ற ஒரு வீரர் தேவை. பிக் பாஷ் தொடரில் 168 ஸ்டிரைக் ரேட் வைத்துள்ள ஸ்மித்தை, பழைய காலத்து வீரர் என்று ஒதுக்கியது நியாயமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அதிரடி ஆட்டம் மட்டுமே டி20 கிரிக்கெட் அல்ல; இக்கட்டான சூழலில் விக்கெட்டைப் பாதுகாக்கத் தெரிந்த வீரர்களும் தேவை என்பதை ஆஸ்திரேலியாவின் இந்த வெளியேற்றம் உணர்த்தியுள்ளது. திறமையான வீரர்களைத் தகுந்த சூழலுக்கு ஏற்பப் பயன்படுத்தத் தவறியதே ஆஸ்திரேலியாவின் வீழ்ச்சிக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
