சென்னை ஆலந்தூர் பகுதியில் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கும் வகையிலான ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கணவனை இழந்த பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வடக்குப் பகுதிச் செயலாளர் வேம்புலி என்பவர், நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்து அந்தப் பெண்ணிற்கு மிகக் கொடூரமான முறையில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் மவுண்ட் போலீசார் வேம்புலி மீது அதிரடியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். போலீஸ் தன்னைத் தூக்க வருவதை அறிந்த அந்த நிர்வாகி தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்குவதாக தவெக மாவட்ட செயலாளர் ஏ.இ.சி.ஆர். சரவணன் அறிவித்துள்ளார்.

​இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி, எக்ஸ் (X) தளத்தில் முதலமைச்சர் விஜய்யை நேருக்கு நேர் சாடி மிகக் கடுமையான வார்னிங் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். “சில தினங்களுக்கு முன்புதான் திருவைகுண்டத்தில் தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண், தவெக எம்எல்ஏ உள்ளிட்டோர் குற்றவாளிகளைக் காப்பாற்றப் பார்க்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.

அதற்குள் ஆலந்தூரில் அடுத்த கொடூரம் அரங்கேறியுள்ளது. சினிமா பாணியில் சிறப்புப் படையைத் தொடங்கி வைத்து, ‘தனிமனித ஒழுக்கம்’ பற்றி பொதுமக்களுக்கு அட்வைஸ் செய்த முதலமைச்சர் விஜய் அவர்கள், முதலில் அதைத் தன் கட்சியினருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்!” என்று காரசாரமாக வெளுத்து வாங்கியுள்ளார்.