தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு 130 புதிய பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. இவற்றில் 110 குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய பஸ்களாகவும், 20 வால்வோ சொகுசு பஸ்களாகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
படுக்கை வசதியுடன் கூடிய வால்வோ சொகுசு பஸ்கள் தயாரிப்பு பணிகள் பெங்களூருவில் உள்ள வால்வோ நிறுவனத்தில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று அங்கு நேரில் சென்று உற்பத்தி பணிகளை பார்வையிட்டார்.
அவர் வால்வோ நிறுவனத்தின் தொழிற்சாலையில் தயாராகி கொண்டிருந்த பஸ்களின் வடிவமைப்பு, பயணிகள் வசதி, பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். பின்னர், சோதனை ஓட்டமாக பஸ்சை அவர் நேரில் ஓட்டிப் பார்த்தார். அனுபவம் வாய்ந்த ஓட்டுநர் போல் அமைச்சர் பஸ்சை திறம்பட இயக்கியதை அதிகாரிகள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
பயிற்சி பெற்று வந்த அரசு விரைவு போக்குவரத்துக் கழக ஓட்டுநர்களை சந்தித்து, அவர்கள் தொழில்முறை திறனை மேம்படுத்தும் விதமாக அமைச்சர் அறிவுரையும் வழங்கினார். வால்வோ நிறுவனத்தின் பயிற்சி ஓடுதளத்தில் நீண்ட நேரம் பஸ்சை சோதனை ஓட்டமாக இயக்கினார்.
அந்த நேரத்தில் போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் சுஞ்சோங்கம் ஜாதக், அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன், வால்வோ நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது: “தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சேவையை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, நவீன மல்டி-ஆக்சில் வால்வோ பஸ்கள் வாங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக பெங்களூருவில் உள்ள வால்வோ பஸ் தொழிற்சாலைக்கு சென்று தயாரிப்பு நிலையிலிருந்த பஸ்களைப் பார்வையிட்டேன். பயணிகளின் வசதிகளும் பாதுகாப்பு அம்சங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பஸ்சை சோதனை ஓட்டமாக இயக்கியும் பார்த்தேன்,” என தெரிவித்தார்.
மேலும் அமைச்சர் எந்தவித பதட்டமும் இன்றி உற்சாகத்துடன் பஸ்சை இயக்கிய காட்சி, அங்கு இருந்த அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தியது.
