திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற திமுக நிர்வாகி சுவாமிநாதன் இல்ல திருமண விழாவில், மாநில துணை முதல்வரும் இளைஞரணித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு வாழ்த்துரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:
“பாஜகவுக்கு அடிமையாக அதிமுக ஏற்கனவே கிடைத்துள்ளது. இப்போது அந்த கட்சி புதிய அடிமைகளை தேடிக்கொண்டிருக்கிறது. பாஜகவுக்கு எத்தனை புதிய அடிமைகள் கிடைத்தாலும், திமுகவை யாராலும் வீழ்த்த முடியாது. ‘கை நம்மை விட்டு எங்கும் போகாது.’ எனது கையை சொன்னேன் — வேறு எதையும் நினைக்காதீர்கள்,” என்று உதயநிதி ஸ்டாலின் நகைச்சுவையுடன் கூறினார்.
அவரது இந்தக் கருத்துகள், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று தனது பிரசார கூட்டத்தில் கூறிய வலுவான கூட்டணி குறித்த உரைக்கு பதிலாக வந்ததாக அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
எடப்பாடி பழனிசாமி, அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைவதாகவும், வலுவான கூட்டணி உருவாகி வருவதாகவும் தனது உரையில் தெரிவித்திருந்தார். மேலும், அதிமுக பிரசார கூட்டத்தில் தவெக கொடிகளுடன் சில இளைஞர்கள் பங்கேற்றதால் “கொடி பறக்குது… கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது, என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். மேலும் இதன் பிண்ணனியில் உதயநிதி இவ்வாறு கூறியுள்ளது கவனிக்க தக்கதாக மாறியுள்ளது.
