நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் எந்த வகையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் நீண்ட நாட்களாக எழுந்து வந்தது. அவருடன் கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளில் சில கட்சிகள் ஈடுபட்டிருந்தாலும், திமுக மற்றும் பாஜக மீது விஜய் கடந்த நாட்களில் வெளிப்படையாகக் கூறிய கடுமையான விமர்சனங்கள், அவர் தனித்து அரசியல் களம் காண்பார் என்பதற்கான அறிகுறியாகக் கருதப்பட்டன.
இதற்கிடையில், கரூரில் நடைபெற்ற பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம், மாநில அரசியல் சூழ்நிலையையே மாற்றியமைத்தது. அந்த நிகழ்வுக்குப் பிறகு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் விஜய் மீதான அணுகுமுறை, (த.வெ.க.) ஆதரவாளர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
எடப்பாடி பழனிசாமி பிரசார கூட்டங்களில் த.வெ.கவினர் தங்கள் கட்சி கொடிகளுடன் கலந்து கொள்வது தொடங்கியது. மேலும், எடப்பாடி பழனிசாமி மற்றும் விஜய் படங்களுடன் கூடிய சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன. இதனால், அதிமுக–விஜய் கூட்டணி உருவாகும் வாய்ப்பு குறித்து அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.
இந்நிலையில், குமாரபாளையத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் த.வெ.க. கொடிகள் காட்சியளித்ததை சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக தலைமையில் வலுவான கூட்டணிக்கான பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது,”
என்று உரையாற்றினார். ஆனால் பின்னர் விசாரணையில், அந்த கூட்டத்தில் த.வெ.க. கொடியை ஏந்தியவர்கள் உண்மையில் த.வெ.கவினர் அல்லர் என்பது தெரியவந்தது. அதிமுக இளைஞர்கள் டி-ஷர்ட் அணிந்தபடி த.வெ.க. கொடியை அசைத்துள்ளனர்.
மேலும் அந்த காட்சியை பார்த்த எடப்பாடி பழனிசாமி “கொடி பறக்குது பாருங்க… பிள்ளையார் சுழி போட்டுட்டாங்க!” என்று கூறியதாகவும், அந்த நிகழ்வு அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
