சென்னை சாலிகிராமத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவின் தாயார் அம்சவேணி உருவப்படத்திற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “கரூர் என் ஊர். யார் வேண்டுமானாலும் வரலாம்; அதற்கு எந்த அனுமதியும் தேவையில்லை. விஜய்க்கு கரூருக்கு செல்லும் உரிமை உள்ளது. இந்தியாவில் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். டிஜிபியிடம் மனு அளித்து அனுமதி பெற வேண்டியதில்லை.

கரூர் மக்கள் பூதாகரமானவர்கள் அல்லர். இறப்பு வீட்டுக்கு வருவோரிடம் எப்படி நடக்க வேண்டும் என்று அவர்களுக்கு நன்றாக தெரியும். எனவே, விஜய் கரூருக்கு செல்ல போலீசாரின் அனுமதி தேவையில்லை,” என்றார். இந்தியாவில் பல பகுதிகளில் அச்சுறுத்தல் இருந்த போதிலும் தமிழ்நாடு மிகவும் பாதுகாப்பானது. எனவே விஜய் அனுமதி பெற்று தான் செல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை என்றார்

 

அதிமுக கூட்டத்தில் தவெகவினர் பங்கேற்றது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “தேர்தலுக்கும் கூட்டணிக்கும் இன்னும் கால அவகாசம் உள்ளது. அதிமுக கூட்டணிக்கு விஜய் வருவாரா என்பது குறித்து காலமே பதில் சொல்ல வேண்டும்,” எனக் குறிப்பிட்டார்.

மேலும் அவர் தொடர்ந்தும் கூறியதாவது: திருமாவளவனுடன் சென்றவர்கள் வழக்கறிஞரை தாக்கியது தவறு. அந்த தாக்குதல் சம்பவத்துக்கு திருமாவளவன் தான் பொறுப்பு. இன்னும் நட்பில் உள்ள ஆதவ் அர்ஜுனாவை தவெகவுக்கு அனுப்பிவிட்டு, பாஜகவை திருமாவளவன் திட்டுகிறார். விடுதலை சிறுத்தைகளின் வாக்குகள் வேறு இடங்களில் செல்வதால் திருமாவளவன் பதற்றமடைந்துள்ளார்,” என்றார்.

“கோவை மேம்பாலத்திற்கு ஜி.டி. நாயுடு பெயர் வைத்தது சரியான தீர்மானம். அரசு பரிந்துரைத்த பட்டியலில் கருணாநிதி பெயர் இருக்கும்போது, எம்.ஜி.ஆர் பெயர் ஏன் விடுபட்டது? தலைவர்களின் பெயர் விடுபட்டதால் சாதி பெயர்களை நீக்கும் அரசாணையை திரும்பப் பெற வேண்டும்,” எனவும் தெரிவித்தார். மேலும், “பள்ளிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்துவது கண்டிக்கத்தக்கது,” என்று கூறினார்.