உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், சிறுவன் ஒருவன் தான் கடத்தப்படுவதாக நடுரோட்டில் கூச்சலிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தச் சிறுவன் இருசக்கர வாகனத்தில் தன் தாய் மற்றும் மாமாவுடன் சென்றபோது, “என்னை யாரோ கடத்துகிறார்கள், காப்பாற்றுங்கள்” என்று சத்தமிட்டான்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உண்மையான கடத்தல் என்று நம்பி போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த இரண்டு காவல் நிலையங்களைச் சேர்ந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இரவு 1 மணி அளவில் போலீசார் அந்தச் சிறுவனின் வீட்டிற்கே சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அந்தச் சிறுவன் பள்ளிக்குச் செல்லப் பிடிக்காமல், தனது பாட்டி வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக இந்த நாடகத்தை ஆடியது தெரியவந்தது. கோடை விடுமுறைக்காக மாமா வீட்டிற்குச் சென்ற சிறுவன், அங்கு நன்றாகச் சுற்றித் திரிந்திருக்கிறான்.
மீண்டும் ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டதை விரும்பாத அவன், மக்கள் தன்னை மீட்டு பாட்டி வீட்டிலேயே விட்டுவிடுவார்கள் என்ற நோக்கத்தில் இவ்வாறு செய்ததாக ஒப்புக்கொண்டான்.
படிப்பைத் தவிர்க்க அந்தச் சிறுவன் கையாண்ட இந்த அதிரடி நாடகம், போலீசாரையும் பொதுமக்களையும் ஒரு நிமிடம் நிலைகுலைய வைத்தது. இறுதியில், மீண்டும் அவனை மாமா வீட்டிற்கே அனுப்பி வைத்தனர்.
