ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் மேற்கு தெருவில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்த வேலை காரணமாக சேலத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ரமேஷ் ஆட்டோவில் ஜங்ஷன் செல்வதற்காக ஏறியுள்ளார். அதே ஆட்டோவில் மற்றொருவரும் பயணம் செய்துள்ளார்.

இந்நிலையில் 5 ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது அந்த நபர் திடீரென கத்தியை காட்டி ரமேஷை மிரட்டி பணம் மற்றும் செல்போனை கேட்டுள்ளார். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த நபர் ரமேஷிடமிருந்த 9 ஆயிரத்து 500 ரூபாய் பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு ஆட்டோவில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து ரமேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்தில் ஆட்டோ டிரைவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால் ஆட்டோ டிரைவரையும், அந்த நபரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.