திருவாரூர் மாவட்டத்தில், பிரதம மந்திரி மீன் வள மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் கொரடாச்சேரி ஒன்றியம், எண்கண் வெட்டாற்றில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில்ஆறுகளில் நாட்டின மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சியானது  நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். பூண்டி.கே.கலைவாணன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் பேசியுள்ளதாவது, மக்கள் பெரிதும் விரும்பி உண்பது நாட்டின மீன் வகைகள் ஆகும். தற்போது நாட்டின மீன்வளம் ஆறுகளில் போதுமான நீரின்மை, குறைந்த காலமே நீர் இருத்தல் மற்றும் சீரற்ற மழைப்பொழிவு ஆகிய காரணங்களினால் மீன்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் நாட்டின மீன்வளங்களை பாதுகாத்து பெருக்கிட ஆறுகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்திடும் திட்டத்தின் கீழ் 2022-2023-ம் ஆண்டில் 40 லட்சம் மீன்குஞ்சுகளை, ரூ.124 கோடி செலவில் ஆறுகளில் விடும் பணியானது  நடைபெற்று வருகிறது. இதையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி 28 கிளை ஆறுகளில் சேல் கெண்டை, கல்பாசு, இந்திய பெருங்கெண்டைகள் போன்ற  மீன்குஞ்சுகள் இருப்பு மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் மீனவர்கள் ஆறுகளில் மீன்பிடிக்கும் போது பயன்படுத்தும் வலையின் கண்ணி அளவு 80 மி.மீக்கு மேல் அதிகமாக இருக்க வேண்டும். மீனவர்கள் மீன் பிடிக்கும் போது, சிறிய ரக மீன்குஞ்சுகள், சினை மீன்கள் பிடிப்பதை தவிர்க்க வேண்டும். அதிலும் முக்கியமாக ஆறுகளில் வெடி வைத்து மீன்பிடிக்க கூடாது. இவ்வாறு செய்வதால், மீன்களின் வாழ்விடம் சிதைந்து, மீன் உற்பத்தியும்  கணிசமாக குறைந்து விடும். இதையும் மீறி அவ்வாறு மீன்பிடித்தால், சம்பந்தபட்டவர்கள்  மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மீனவர்கள் அன்றாடம் பிடிக்கும் மீன்களின் வகை மற்றும் அளவினையும்  பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.