ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிபட்டினம் பகுதியில் முகமது பிலால் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டின் மேலே மின்சார கம்பி சென்றதால் அதை மாற்றி அமைக்க ‌ மனு கொடுத்துள்ளார். இதற்கான கட்டணம் ரூ.42,900-ஐ அவர் ஆன்லைனில் செலுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கடந்த ஒரு மாதமாக தேவிபட்டினம் மின் உதவி பொறியாளர் அலுவலகத்தில் முறையிட்டுள்ளார். ஆனால் அங்கு வணிக ஆய்வாளராக பணிபுரியும் ரமேஷ்பாபு என்பவர் லஞ்சம் கேட்டுள்ளார். அவர் உதவி பொறியாளருக்கு ரூ.3,000-ம், ஊழியர்களுக்கு ரூ‌.6,000-ம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இந்த பணத்தை கொடுக்க அவருக்கு விருப்பமில்லாததால் ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் நிலையத்தில் அவர் புகார் கொடுத்துள்ளார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் அவரிடம் ரசாயனம் கலந்த பணத்தை கொடுத்துள்ளனர். இந்த பணத்தை நேற்று காலை ரமேஷ் பாபுவிடம் அவர் கொடுத்தார். அதில் அவர் ரூ.3,000-த்தை மட்டும் பெற்றுக்கொண்டு மீதி பணத்தை கந்தசாமி என்பவரிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார். இதனையடுத்து அவர் கந்தசாமியிடம் மீதி பணத்தை கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் இரண்டு பேரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் உதவி மின் பொறியாளர் செல்வி என்பவருக்கும் இதில் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. மேலும் இவர்கள் 3 பேரையும்  காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.