மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அதிரடியாகக் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. ‘Y’ பிரிவு பாதுகாப்பில் உள்ள தவெக தலைவர் விஜய் அவர்களுக்கு, தமிழகத்தில் உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை என அந்தக் கடிதத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, சென்னையில் பெரம்பூரிலிருந்து கொளத்தூர் நோக்கிப் பரப்புரைக்காகச் சென்ற வழியில், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி தவெக இணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார் இந்த முறையீட்டைச் செய்துள்ளார்.

​தலைவர் விஜய்யின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் சூழலில், மாநில அரசு பாதுகாப்பு வழங்குவதில் மெத்தனமாக இருப்பதாகத் தவெக தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பாதுகாப்பில் இருக்கும் ஒரு தலைவருக்குத் தேவையான ஒத்துழைப்பை உள்ளூர் காவல்துறை வழங்கவில்லை என அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும், விவாதத்தையும் கிளப்பியுள்ளது.