வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நடிகர் விஜய்யின் அரசியல் குறித்துத் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார். “விஜய்யின் அரசியல் வருகையை முதன்முதலில் வரவேற்று, வாழ்த்தியது வி.சி.க.தான்” என்று குறிப்பிட்ட அவர், தங்கள் கட்சிக்கு எந்த அச்சமும் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், நடிகர் விஜய் கட்சி தொடங்கி இரண்டரை ஆண்டுகள் ஆவதாகவும், பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளபோதும், அவர் இதுவரை கொள்கை சார்ந்த அரசியலைப் பேசாமல், வெறுப்பு அரசியலை மட்டுமே முன்னிறுத்துவதாகவும் திருமாவளவன் விமர்சனம் செய்தார்.

“உடனடியாக ஆட்சியில் அமர்ந்து விட வேண்டும் என்ற வேட்கையோடு, ஆளுங்கட்சியை விமர்சிப்பது என்பதையும் தாண்டி அவர் வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருக்கிறார்” என்று திருமாவளவன் குற்றம் சாட்டினார். இதனால்தான் ஜனநாயக சக்திகள் பலரும் அவருக்கு அறிவுரை சொல்லும் வகையிலும், வழிகாட்டும் வகையிலும் கருத்துகளைச் சொல்லி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

வி.சி.க. இதுவரை தனிநபர் விமர்சனம் செய்ததில்லை என்றும், தமிழக வெற்றிக் கழகத்தை கடுமையாக விமர்சித்ததில்லை என்றும் கூறிய திருமாவளவன், “அவர்கள் முன்வைக்கும் அரசியலில் எங்களுக்கு விமர்சனம் இருக்கிறது. அது கொள்கை சார்ந்த அரசியலாக இல்லாமல், ஆளுங்கட்சி மீது வெறுப்பை உமிழக்கூடிய அரசியலாக மட்டுமே இருக்கிறது என்பதைத்தான் நாங்கள் சுட்டிக்காட்டியுள்ளோம்” என்றும் அவர் தெரிவித்தார்.