ராஜஸ்தான் மாநிலம், பாரா பகுதியில் அரசு ஆசிரியராகப் பணியாற்றி வந்த அனுஜ் கார்க் (42), வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்காகத் தோல்பூரில் வாக்குச்சாவடி நிலை அலுவலராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்தப் பணியின் நிமித்தமாக, நேற்று இரவு 1 மணியளவில் வீட்டில் வைத்து வாக்காளர் பட்டியல் விவரங்களைப் பதிவேற்றம் செய்யும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களாக அனுஜ் கார்க் கடும் பணிச்சுமைக்கு ஆளாகியிருந்ததாகவும், அதில் ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாகவே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அனுஜ் கார்க்கின் இந்த உயிரிழப்பு, தமிழகம், மேற்கு வங்கம் உட்பட 12 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தொடர்ந்து மரணமடைந்து வரும் வரிசையில் இணைந்துள்ளது, அங்கு நிலவும் பணிச்சுமை குறித்த கவலையை மேலும் அதிகரித்துள்ளது.