ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் நடைபெற்ற அ.தி.மு.க.வின் பிரசாரக் கூட்டத்திற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வந்தபோது, அ.தி.மு.க.வினர் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர். கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை, எல்.இ.டி. திரையில் வீடியோக்களைக் காண்பித்து கடுமையாக விமர்சித்தார்.
அப்போது மக்கள் மத்தியில் பேசிய இபிஎஸ், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் அமையும் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைந்தால், கோபி தொகுதி முதன்மைத் தொகுதியாக மாற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். இவ்வளவு பெரிய அளவில் கூட்டம் கூடியிருப்பதன் மூலம், கனவு காணும் அனைவரின் கனவுகளையும் மக்கள் நொறுக்கிவிட்டீர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, 50 ஆண்டுகளாகப் போராடி வந்த அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை மாநில நிதியிலேயே அ.தி.மு.க. அரசு நிறைவேற்றியதாகக் குறிப்பிட்டார். அ.தி.மு.க. ஆட்சியில் கோபிசெட்டிப்பாளையம் தொகுதிக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டதாகவும், ஆனால் தி.மு.க. ஆட்சியில் ஈரோடு மாவட்டத்திற்கு எந்தத் திட்டமும் செய்யப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
டெல்டா மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டபோது ஓடோடிச் சென்று உதவி செய்த இயக்கம் அ.தி.மு.க. என்று அவர் தெரிவித்தார். அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கான நிகழ்ச்சியில் பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றபோது, கோபிசெட்டிப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் பங்கேற்கவில்லை என்றும், அதற்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் படங்கள் இல்லை என்று காரணம் சொன்னதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால், இப்போது எந்தப் படங்களை வைத்துக்கொண்டு மாற்றுக் கட்சியில் சேர்ந்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அ.தி.மு.க. தான் உங்களுக்கு அடையாளம் கொடுத்தது, பதவி கொடுத்தது என்றும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, மற்றும் தனது ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது எல்லாம் அவர் தூய்மையான ஆட்சி தரவில்லையா என்றும் செங்கோட்டையனைச் சாடினார்.
