உலகப் புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று மிக உற்சாகமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியைத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ‘விடுதலை’ நடிகர் சூரி, துணை முதல்வர் உதயநிதிக்குக் ‘காளை’ சிற்பத்தைப் பரிசாக வழங்கி கௌரவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சூரி, “இடையில் ஜல்லிக்கட்டு கலாசாரம் சற்று குறையத் தொடங்கிய சூழல் ஏற்பட்டது. ஆனால், இப்போது ஜல்லிக்கட்டு மீண்டும் எழுச்சி பெற்று மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பாலமேடு ஜல்லிக்கட்டு இன்னும் படுஜோராக இருக்கிறது” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மண் மணக்கும் தமிழர்களின் வீர விளையாட்டை நேரில் கண்டு ரசித்த சூரியின் வருகை, அங்கிருந்த ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.