கடந்த மாதம் 27-ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த கொடூர சம்பவம் தமிழக அரசியல் வட்டங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து பல தரப்பினரும் விஜய் மீது குற்றச்சாட்டுகளை வைத்தனர்,

அதே நேரம் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணை நடைபெறுகிறது. கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து சிறப்பு புலனாய்வுக்குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் பிறகு விஜய் தனது வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கிறார்,

பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுடன் வீடியோ அழைப்பு மூலம் பேசி ஆறுதல் கூறியுள்ளார். இந்நிலையில், நடிகர் தாடி பாலாஜி, விஜயை சந்தித்தால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பேன் என அறிவித்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தாடி பாலாஜி, கரூர் சம்பவம் விஜய்க்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்தார். விஜய் இரண்டாம் கட்ட தலைவர்களை விசுவாசிகளாக நியமித்திருந்தால் இத்தகைய சம்பவம் நடக்காது எனவும்,

நேரத்தை முறையாக பின்பற்றியிருந்தால் இது தவிர்க்கப்பட்டிருக்கும் எனவும் கூறினார். கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பின் விஜய் தனித்துவிடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அவர், கூட்டணி தொடர்பாக என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்து பார்க்க வேண்டும் என்று கூறினார். இந்தக் கோரிக்கை, தமிழக அரசியலில் விஜய்யின் எதிர்கால நகர்வுகளுக்கு புதிய திசையை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.