பங்குச் சந்தை முதலீடு, காப்பீட்டு பிரீமியம், கடன் அட்டை நிலுவை உள்ளிட்ட முக்கிய வகை பணப்பரிவர்த்தனைகளுக்கான யுபிஐ (UPI) பரிவர்த்தனை உச்ச வரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய தேசிய பணப்பட்டுவாடா கழகம் (NPCI) வெளியிட்ட அறிவிப்பில், இந்த மாற்றம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது தற்போதைய முறைப்படி ஒரே நபர் இன்னொரு நபருக்கு ஒரு நாளில் யுபிஐ மூலம் அனுப்பக்கூடிய அதிகபட்ச தொகை ரூ.1 லட்சம்.
பங்குச் சந்தை முதலீடு, காப்பீட்டு பிரீமியம், கடன் அட்டை நிலுவை உள்ளிட்ட நிறுவன பரிவர்த்தனை வரம்பு ரூ.2 லட்சம்.
கல்விக் கட்டணம், IPO முதலீடு போன்றவை ரூ.5 லட்சம் வரம்புடன் செயல்படுகின்றன.
இந்நிலையில் தற்போது அமல்படுத்தப்பட இருக்கும் இந்த புதிய மாற்றத்தின் கீழ், கீழ்க்காணும் வகை பரிவர்த்தனைகளுக்கான உச்ச வரம்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன: அதன்படி,
பங்குச் சந்தை முதலீடு, காப்பீட்டு பிரீமியம், அரசுத் தொகைகள் (EMD) ₹2 லட்சம் ₹10 லட்சம்
ஒரு முறை பரிமாற்றம் (Single Transaction) ₹2 லட்சம் ₹5 லட்சம்
போக்குவரத்து கட்டணங்கள் ₹1 லட்சம் ₹10 லட்சம்
கடன் அட்டை நிலுவை செலுத்தல் ₹2 லட்சம் ₹6 லட்சம்
நகை வாங்குதல் ₹1 லட்சம் ₹6 லட்சம்
கல்விக் கட்டணம், மருத்துவமனை கட்டணம், IPO முதலீடு ₹5 லட்சம் மாற்றம் இல்லை
தனிநபர் -> தனிநபர் பரிவர்த்தனை ₹1 லட்சம் மாற்றம் இல்லை
என்பிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாடிக்கையாளர்கள் மற்றும் நிறுவனங்கள் அதிக மதிப்புள்ள பணப்பரிவர்த்தனைகளை தடையின்றி மேற்கொள்ளும் வகையில், இந்த வரம்பு உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தேவையின் அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டதாகும்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நடவடிக்கை மூலம், வணிகர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான கட்டணங்களை நேர்மறையாக, விரைவாக மற்றும் பாதுகாப்பாகச் செலுத்த முடியும் என நம்பப்படுகிறது.
