இன்றைய டிஜிட்டல் உலகில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் மற்றும் திரை சாதனங்களில் (screens) அதிக நேரம் செலவழிக்கின்றனர். குறிப்பாக, குழந்தைகளிடம் அழுகையைத் தடுக்க சில பெற்றோர் அவர்களுக்கு செல்போன் கொடுத்து பழக்கமடையச் செய்கிறார்கள். இது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியது என அமெரிக்க இதய அமைப்பின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் வெளியிட்டுள்ள இந்த ஆய்வில்,  “செல்போன் மற்றும் தொலைக்காட்சி திரைகளை அதிக நேரம் பார்ப்பது, உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், இன்சுலின் எதிர்ப்பு போன்ற வளர்சிதை மாற்ற (metabolic) பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது எதிர்காலத்தில் இதய நோய்களுக்கு வழிவகுக்கும்,” என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இன்றைய சூழலில், செல்போனை முழுமையாகத் தவிர்ப்பது சாத்தியமில்லை என்பது நிஜம். ஆனாலும், குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு இது ஒரு கட்டுப்பாடுடன் கூடிய பயன்பாடாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதற்காக பெற்றோர் எடுத்து கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்: குழந்தைகள் ஒரு நாளில் 1–2 மணி நேரத்திற்கு மட்டுமே மொபைல் அல்லது மடிக்கணினி பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும். வார இறுதி நாட்களில், குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை செல்போன் பயன்படுத்தகூடாது என அறிவித்து, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மொபைல்களைத் தவிர்க்கும் பழக்கம் வளர்க்கலாம்.

அதற்குப் பதிலாக, குழந்தைகளை அருகிலுள்ள பூங்கா, விளையாட்டு மைதானம் அல்லது வெளி இடங்களுக்கு அழைத்து சென்று நேரத்தை செலவழிக்கச் செய்யலாம்.

மேலும் இதன் மூலம், குழந்தைகள் உடல்நலம், சமூக உறவுகள் மற்றும் இயற்கையுடன் தொடர்புடைய அனுபவங்களை மேம்படுத்த முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.