திருமணத்திற்குப் புறம்பான உறவு இருப்பதாகக் கூறி, ஆசிரியை ஒருவரை அவரது கணவரும், அவரது நண்பர்களும் தாக்கி, பொது இடத்தில் அவமானப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஒடிசா மாநிலம் பூரி மாவட்டம் நீமபாடா பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அதில், ஆசிரியை ஒருவருக்கு மாலை அணிவிக்கப்பட்டு, அவர் தெருவில் நடக்க கட்டாயப்படுத்தப்பட்ட காட்சிகள் இடம்பெற்று உள்ளன. மேலும், அவர் மோசமான வார்த்தைகளால் திட்டப்பட்டதும் காணப்படுகிறது.

இது தொடர்பாக போலீஸார் தெரிவித்ததாவது, குடும்ப தகராறை அடுத்து, ஆசிரியை தனது கணவரிடமிருந்து பிரிந்து நீமபாடா பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 8 மணியளவில், அவரது கணவரும், அவரது நண்பர்களும் அவரது வீட்டிற்குள் நுழைந்து, ஆசிரியை மற்றும் அவரது சக ஊழியரை தாக்கியுள்ளனர்.

அந்த ஆசிரியையின் கணவர், அவர் கள்ளத்தொடர்பு செய்ததாக சந்தேகித்து, சக ஊழியருடன் அரை நிர்வாண நிலையில் இருப்பதைக் கண்டதாகக் கூறியுள்ளார். பின்னர், அந்த ஆண் ஊழியரை உள்ளாடையுடன் பிடித்து, தெருவில் ஊர்வலமாக அழைத்துச் சென்றதாகவும் தெரிகிறது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஆசிரியின் கணவரும், அவரது கூட்டாளிகளில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதல் மற்றும் பொது அவமானம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.