தெலுங்கானா மாநிலம் ஹனுமகொண்டா மாவட்டத்தின் நயீம்நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயந்த்’ (வயது 15) என்ற மாணவர், பள்ளி மைதானத்தில் பிற மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. அவர் தரையில் விழுந்தவுடன் காதுகள் மற்றும் மூக்கில் இருந்து  ரத்தம் வடிந்தது, பள்ளி வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

சம்பவ இடத்தில் இருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக ஜெயந்தை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மாணவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

னஇந்நிலையில், ஜெயந்தின் தந்தை மற்றும் பெற்றோர், “பள்ளி ஆசிரியர்கள் மாணவனை கொடூரமாக தாக்கியதாலே இத்தகைய துயர சம்பவம் நிகழ்ந்தது” என குற்றம்சாட்டியுள்ளனர். மாணவனின் மரணத்திற்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பாளிகளாக இருக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த குற்றச்சாட்டுகளின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவரின் மரணத்திற்கு காரணமானது என்ன என்பதை உறுதிப்படுத்த பிரேத பரிசோதனைக்காக உடல் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.