தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காவல் நிலைய மரணங்கள் குறித்து த.வெ.க. அரசு உடனடியாகப் பதிலளிக்க வேண்டும் என்றும், இத்தகைய அநீதிகளைக் கண்டு அமைதி காக்கும் முதலமைச்சர் விஜய்க்குத் தனது வன்மையான கண்டனங்களைத் தெரிவிப்பதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். மாநிலத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து, விசாரணை கைதிகள் அடுத்தடுத்து உயிரிழப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமீபத்திய நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டிய அவர், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சிறையில் 19 இடங்களில் காயங்களுடன் உயிரிழந்த சரி வர்மன், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய விசாரணையின் போது போலீசார் தாக்கியதில் பலியான அருணாச்சலம், சென்னை புழல் சிறைக் கைதி பாலாஜி மற்றும் எம்.ஜி.ஆர் நகர் வெங்கடேசன் ஆகியோரின் மரணங்களை மேற்கோள் காட்டியுள்ளார். காவல்துறையினரின் சித்திரவதையால் அடுத்தடுத்து உயிர்கள் பறிபோவதும், பிரேத பரிசோதனையில் வெளிவரும் அதிர்ச்சித் தகவல்களும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

எதிர்க்கட்சியாக இருந்தபோது காவல்துறை அத்துமீறல்களுக்கு எதிராகப் பேசிவிட்டு, தற்போது முதலமைச்சரானதும் இதைக் கண்டித்துக் ஒரு வார்த்தை கூடப் பேசத் துணிவின்றி அமைதி காப்பது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ‘பொறுப்பேற்பது’ (Accountability) மற்றும் ‘மன்னிப்பு கேட்பது’ (Apology) ஆகிய சொற்கள் முதலமைச்சரின் அகராதியிலேயே இல்லையா எனக் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ள மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திக்கவோ அல்லது ஆறுதல் கூறவோ கூட மனமில்லாத அரசாக த.வெ.க. அரசு செயல்பட்டு வருவதாகச் சாடியுள்ளார்.

எனவே, தொடரும் இந்த லாக்-அப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தவறிழைத்த காவல்துறை அதிகாரிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நீதியும் நிவாரணமும் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.