ரஷ்யாவின் ரோஸ்டோவ்-ஆன்-டான் நகரில் உள்ள ‘டோவ்கல்யுக் டைனஸ்டி’ சர்க்கஸில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், எதிர்பாராத விபத்து ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பயிற்சியாளர்கள் முன்னிலையில் மூன்று புலிகள் சாகசம் செய்து கொண்டிருந்தபோது, திடீரென புலிகளைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வலை சரிந்து விழுந்தது.

இந்தத் திடீர் விபத்தால் மிரண்டு போன ஒரு புலி, கண் இமைக்கும் நேரத்தில் தடுப்புகளைத் தாண்டி முன்வரிசையில் அமர்ந்திருந்த பார்வையாளர்கள் மீது பாய்ந்தது. இதனால் சர்க்கஸ் கூடாரமே போர்க்களமாக மாறியது. குழந்தைகளுடன் வந்திருந்த பெற்றோர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடத் தொடங்கினர். சிலர் பயத்தில் இருக்கையிலேயே உறைந்து போயினர்.

 

“யாரும் ஓடாதீர்கள், அமைதியாக இருங்கள்” என அதிகாரிகள் மைக்கில் எச்சரித்துக் கொண்டே இருக்க, பயிற்சியாளர்கள் போராடி அந்தப் புலியைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். நல்வாய்ப்பாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றாலும், இந்த வீடியோ இணையத்தில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“காட்டு விலங்குகளை இப்படிச் சர்க்கஸில் பயன்படுத்துவது உயிருக்கே ஆபத்து” என விலங்கு நல ஆர்வலர்கள் மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.