திருத்தணி முருகன் கோவில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மலையில் அமைந்துள்ளது. இது முருகப் பெருமான் வள்ளியை திருமணம் செய்து கொண்ட தலமாகும். இங்கு ஆடிக்கிருத்திகை, தைப்பூசம் போன்ற  முக்கிய விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிந்து வருகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், அதை தவிர்க்கும் பொருட்டு மாற்றுப்பாதை திட்டம் மலைக்கோவிலில் இருந்து அமிர்தாபுரம் வரை செயல்படுத்த இந்து அறநிலை துறை உத்தரவிட்டது. இதனையடுத்து, கோவில் செயல் அலுவலர் விஜயா தலைமையில், வருவாய்த்துறையினர், வனத்துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள்  மாற்றுப்பாதை அமைக்கப்படவுள்ள இடத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆய்வு செய்தனர்.  அப்போது அங்கிருந்த மடம் என்ற கிராமத்தில் இருந்த 15 வீடுகள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து அந்த 15 வீடுகளை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஆனால் அந்த பகுதி மக்கள் வீடுகளை காலி செய்யாமல் வசித்து வந்த நிலையில், கடந்த வாரம் முருகன் கோவில் அதிகாரிகள் அந்த பகுதியில் அறிவிப்பு பலகை வைக்க சென்ற போது அதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் கோவில் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இரு தரப்பினரிடையே  பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் சர்வேயர் வைத்து அளவீடு செய்ய முடிவெடுக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் கோவில் கண்காணிப்பாளர்கள் சித்ராதேவி, ஐயம்பிள்ளை ஆகியோர் முன்னிலையில் வருவாய் ஆய்வாளர் கமல், சர்வேயர் கோவிந்தராஜ் ஆகியோர் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் மடம் கிராமத்தில் கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை அளவீடு செய்யும் பணிகளை மேற்கொண்டனர்.

பின்னர் அளவீடு செய்யும் பகுதியில் குளம் மற்றும் மரம் ,செடிகள் அதிக அளவில் உள்ளதால் துல்லியமான அளவீடு செய்ய முடியவில்லை எனவும் டி.ஜி.பி.எஸ். எனும் நவீன எந்திரத்தை பயன்படுத்தி மற்றொரு நாளில் இந்த பணிகள் மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து கோவில் துணை ஆணையருக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வருவாய் ஆய்வாளர் கமல் தெரிவித்துள்ளார்.