உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பக்ஷிதா காதலாப் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் அனுராக் சிங். இவரது மனைவி சவும்யா காஷ்யப், நேற்று தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சவும்யாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த தற்கொலைக்கு முந்தைய நேரத்தில், சவும்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில் தூக்கு கயிறின் அருகே நின்று கதறி அழுதபடி பேசும் அவர், “எனது கணவர் அனுராக் சிங் மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். அவரைத் திருமணம் செய்ய அவரின் தாய் வற்புறுத்துகிறார்.

எனது மைத்துனர் சஞ்சய் காவல்துறையில் பணிபுரிகிறார். மற்றொரு உறவினர் ரஞ்சித் வக்கீலாக பணியாற்றுகிறார். இவர்கள் மூவரும் தொடர்ந்து என்னை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி சித்ரவதை செய்து வந்தனர்” என கூறியுள்ளார்.

மேலும் அந்த வீடியோவில், “அவர்கள் பணம் மற்றும் அதிகாரத்தை வைத்து எதையும் செய்யக்கூடியவர்கள். இன்று நான் உயிரிழந்தால் அதற்குக் காரணம் அவர்கள் தான்” என தெரிவித்துள்ளார். சவும்யாவின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்களிடையே சோகத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்போது போலீசார் இந்த வீடியோவை முக்கிய ஆதாரமாகக் கொண்டு விசாரணையை தீவிரமாக நடத்தி வருகின்றனர். அனுராக் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தற்கொலைக்குத் தூண்டுதல், மனவேதனை ஏற்படுத்தல் உள்ளிட்ட கோணங்களில் வழக்குப்பதிவு செய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகள் நேரில் விசாரித்து வருகின்றனர்.