தேனி மாவட்டம் கூடலூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் பெருமாள் கோவில் புலம், கழுதைமேடு, சுரங்கனார் வனப்பகுதி, கல் உடைச்சான் பாறை, ஏகலூத்து போன்ற வனப்பகுதிகள் உள்ளன. இங்கு ஏராளமான விவசாயிகள் மானாவாரி நிலங்களில் விவசாயம் செய்து வரும் நிலையில், இந்த மலை அடிவாரத்தில் மான், காட்டுப்பன்றி, கேளையாடு ஆகிய வனவிலங்குகளும் வாழ்கின்றன.

இந்த விளைநிலங்களுக்குள் வனவிலங்குகள் இரை தேடி அடிக்கடி புகுந்து பயிர்களை நாசம் செய்கிறது. இதனால் சோலார் மின்வேலி கம்பி அமைப்பதற்கு விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. அதுவும் கழுதைமேடு பகுதியில் இருந்து பெருமாள் கோவில் புலம் வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு மட்டும் அமைக்கப்பட்டது.

இந்த வேலி அமைக்கப்பட்ட ஒரு ஆண்டுக்குள் சேதமடைந்ததால், அதன் பின் சீரமைப்பு பணிகளை   15 ஆண்டுகள் ஆகியும் மேற்கொள்ளாததால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  எனவே மலையடிவார பகுதியில் இந்த பாதிப்பினை தடுக்க அகழிகள் மற்றும் புதிதாக சோலார் மின்வேலி அமைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தி வருகின்றனர்.