தாய்மை என்பது வெறும் பிரசவத்தோடு முடிந்துவிடுவதில்லை, அது அரவணைப்பில் வாழ்கிறது என்பதை நிரூபிப்பவர்கள் தான் இந்த ஒற்றைப் பெற்றோர்களாக வாழும் அப்பாக்கள். ஏதோ ஒரு இக்கட்டான சூழ்நிலையிலோ அல்லது காலத்தின் கட்டாயத்தாலோ தாயின் நிழல் பிள்ளைகளுக்குக் கிடைக்காமல் போகும்போது, அந்த இடத்தைத் தானே நிரப்பிக் கொள்ளும் ஒரு தகப்பனின் போராட்டம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.
மேலும் விடியற்காலையில் எழுந்து சமையல் செய்வதில் தொடங்கி, பிள்ளைகளின் தலை சீவி, பள்ளிக்கு அனுப்பி, அவர்களின் சின்னச் சின்ன அடம் பிடித்தல்களையும் அழுகைகளையும் தாங்குவது வரை அத்தனையிலும் அம்மாவாகவே மாறிவிடுகிறார்.
இதனால் தன் சொந்தக் கனவுகள், தூக்கம், சுகதுக்கங்கள் என அனைத்தையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு, தன் பிள்ளைகளின் சிரிப்பையே உலகமாகக் கொண்டு வாழும் இந்த அப்பாக்கள், உண்மையில் மீசையற்ற தாயாகவே உருவெடுக்கிறார்கள். அம்மாவின் பாசத்திற்கு ஈடுஇணை இல்லை என்று உலகம் சொன்னாலும், அதே பாசத்தை இரட்டிப்பாகத் தரும் வல்லமை இந்த அப்பாவுக்கு உண்டு.
அதே போன்று பிள்ளைகள் வளரும் பருவத்தில் ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்களை ஒரு தாயைப் போலப் புரிந்து கொண்டு, தோழனாகவும் வழிகாட்டியாகவும் அவர்கள் கூடவே நிற்கிறார்கள். சமூகத்தின் பார்வைகளையும், பொருளாதார நெருக்கடிகளையும் ஒற்றை ஆளாகத் தாங்கிக்கொண்டு, பிள்ளைகளுக்கு எந்தக் குறையும் வந்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.
அதோடு இரவில் பிள்ளைக்குக் காய்ச்சல் வரும்போது, தூங்காமல் நெற்றியில் துணி நனைத்துப் போடும் அந்த அப்பாவின் கைகளில் ஒரு தாயின் ஸ்பரிசம் அப்படியே இருக்கும். தாயில்லாமல் பிள்ளைகளை வளர்த்தெடுத்த ஒவ்வொரு அப்பாவும், வெறும் தந்தையல்ல; அவர்கள் தங்களின் பிள்ளைகளுக்காகத் தங்களைத் தாங்களே மறுவடிவமைத்துக் கொண்ட உன்னதமான ‘அம்மா’ அத்தகைய தாயுமான அப்பாக்களுக்கு இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்.
