உலகளவில் அதிகரித்து வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் குறித்து ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கையின்படி, கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் உலகக் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 16 விழுக்காடு உயர்ந்து, மொத்தம் 18.3 டிரில்லியன் டாலர் என்ற வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது.
இது இந்திய மதிப்பில் சுமார் 1,660 லட்சம் கோடி ரூபாயாகும். கடந்த 2020-ஆம் ஆண்டில் இருந்ததை விட இவர்களின் சொத்து மதிப்பு தற்போது 80 விழுக்காடு அதிகரித்துள்ளது. குறிப்பாக, உலக மக்கள் தொகையில் பாதி அளவு உள்ள ஏழை மக்களின் மொத்த சொத்து மதிப்புக்குச் சமமான வளர்ச்சியை, இந்தச் சில கோடீஸ்வரர்கள் ஒரே ஆண்டில் ஈட்டியிருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பணக்காரர்கள் தங்களின் பொருளாதார வலிமையைப் பயன்படுத்தி அரசியல் அதிகாரத்தையும் ஊடகங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக இந்த அறிக்கை குற்றம் சாட்டுகிறது.
ஒரு சாதாரண குடிமகனை விட ஒரு கோடீஸ்வரர் அரசியல் பதவிகளைப் பெறுவதற்கு 4,000 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளதாகவும், உலகின் முன்னணி சமூக வலைதளங்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் அவர்களின் பிடியிலேயே இருப்பதாகவும் ஆக்ஸ்பாம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்ட வரிச்சலுகைகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்திய நடவடிக்கைகள், கோடீஸ்வரர்களின் சொத்து உயர முக்கியக் காரணமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒருபுறம் செல்வந்தர்களின் சொத்து உயரும் நிலையில், மறுபுறம் உலகில் நான்கில் ஒருவருக்குச் சரியான உணவு கிடைப்பதில்லை என்பதும், மக்கள் தொகையில் பாதி பேர் வறுமையில் வாடுவதும் இந்த ஏற்றத்தாழ்வின் கொடூர முகத்தைக் காட்டுகிறது.
பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகமாக உள்ள நாடுகளில் ஜனநாயகம் சீர்குலைய அதிக வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ள ஆக்ஸ்பாம், இதற்குத் தீர்வாகப் பணக்காரர்கள் மீது அதிக வரி விதிக்கப்பட வேண்டும் என்றும் அரசியலில் பணத்தின் ஆதிக்கத்தைக் குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
அதே நேரத்தில், இந்தியாவின் இடஒதுக்கீடு முறையை இந்த அறிக்கை வெகுவாகப் பாராட்டியுள்ளது. சமூகத்தில் பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு அதிகாரத்தில் பங்கு அளிப்பதன் மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்த இந்தியா பின்பற்றும் இந்த முறை, அதிகாரத்தைப் பரவலாக்குவதற்கான ஒரு சிறந்த வழி என ஆக்ஸ்பாம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
வறுமையை ஒழிக்கவும் சமத்துவத்தை நிலைநாட்டவும் இத்தகைய ஆக்கப்பூர்வமான சட்டங்கள் உலக நாடுகளுக்குத் தேவை என்றும் அந்த நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
