பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸின் மகன் ஜுனைத் சஃப்தரின் இரண்டாவது திருமணம் அண்மையில் லாகூரில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமண விழாக்களில் மரியம் நவாஸ் அணிந்திருந்த ஆடம்பரமான உடைகள் மற்றும் அவரது பொலிவான தோற்றம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறிப்பாக, மெஹந்தி விழாவிற்கு அவர் அணிந்திருந்த மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற லெஹங்கா மற்றும் திருமணத்தின் போது அவர் உடுத்தியிருந்த வெளிர் பச்சை நிற பாரம்பரிய உடையும் வைரலாகி வருகின்றன. 52 வயதான மரியம் நவாஸ், மணப்பெண்ணுக்கே சவால் விடும் வகையில் மிக இளமையாகவும் அழகாகவும் இருப்பதாக ஒரு தரப்பினர் பாராட்டினாலும், மற்றொரு தரப்பினர் அவர் மணப்பெண்ணின் முக்கியத்துவத்தை மறைக்கும் வகையில் அளவுக்கு அதிகமாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டதாக விமர்சித்து வருகின்றனர்.
இந்தத் திருமணத்தில் மணப்பெண் ஷான்சே அலி அணிந்திருந்த ஆடைகள் மற்றொரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. அவர் தனது மெஹந்தி மற்றும் திருமணச் சடங்குகளுக்கு இந்திய வடிவமைப்பாளர்களான சபயசாச்சி மற்றும் தருண் தஹிலியானி வடிவமைத்த ஆடைகளைத் தேர்ந்தெடுத்திருந்தார்.
பாகிஸ்தானிலேயே சிறந்த வடிவமைப்பாளர்கள் இருக்கும்போது, இந்திய பிராண்டுகளுக்கு முக்கியத்துவம் அளித்தது ஏன் என்று அந்நாட்டு நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஜுனைத் சஃப்தரின் இந்த இரண்டாவது திருமணத்தில் பாகிஸ்தானின் முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் கலந்து கொண்ட போதிலும், இணையவாசிகளின் கவனம் முழுவதும் மரியம் நவாஸின் ‘ராஜ தோற்றம்’ மற்றும் இந்திய வடிவமைப்பாளர் உடைகள் மீதே குவிந்துள்ளது.
