லண்டனில் உள்ள ‘விகார்ஸ் கிரீன் பிரைமரி’ (Vicarage Green Primary School) பள்ளியில் படிக்கும் 8 வயது இந்து மாணவன் ஒருவன், தனது நெற்றியில் திலகம் இட்டு பள்ளிக்குச் சென்றுள்ளான். இதனைப் பார்த்த பள்ளி ஊழியர்கள், அந்த மாணவனின் மத நடைமுறையை விளக்குமாறும், அதை ஏன் பின்பற்றுகிறீர்கள் என்று நியாயப்படுத்துமாறும் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஒரு சிறுவனிடம் அவனது மத நம்பிக்கையைப் பற்றி இப்படி ஆதாரங்களைக் கேட்பது அடிப்படை மனித உரிமை மீறல் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த விவகாரம் இத்துடன் முடிந்துவிடவில்லை. அந்த மாணவன் பள்ளியில் வகித்து வந்த பொறுப்பு மிக்க பதவிகளில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டதாகத் தெரிகிறது. பள்ளியின் இத்தகைய பாகுபாடான நடவடிக்கையால் மனமுடைந்த பெற்றோர், வேறு வழியின்றித் தனது மகனை அந்தப் பள்ளியில் இருந்து மாற்றி வேறொரு பள்ளியில் சேர்த்துள்ளனர். “பன்முகத்தன்மை பேசப்படும் ஒரு நாட்டில், மத அடையாளத்திற்காக ஒரு குழந்தை தண்டிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது” என்று அந்தச் சிறுவனின் பெற்றோர் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
