ஆர்டிக் பகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்கப் போவதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ள அறிவிப்பு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது டென்மார்க் நாட்டின் தன்னாட்சி பிராந்தியமாக உள்ள கிரீன்லாந்தை, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காகக் கையகப்படுத்த விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக டென்மார்க் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், ஒருவேளை இணக்கமான உடன்பாடு எட்டப்படாவிட்டால் அந்தத் தீவைக் கைப்பற்ற ராணுவ நடவடிக்கை எடுக்கவும் தயங்கப்போவதில்லை என்று டிரம்ப் அதிரடியாக எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த முயற்சிக்கு டென்மார்க் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அதற்கு ஆதரவாக நின்ற பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட எட்டு ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா கூடுதலாக பத்து விழுக்காடு இறக்குமதி வரி விதித்து உத்தரவிட்டுள்ளது.
கிரீன்லாந்தை ஒப்படைக்க மறுக்கும் பட்சத்தில், இந்த வரி விதிப்பு எதிர்காலத்தில் நூறு விழுக்காடு வரை உயர்த்தப்படும் என்றும் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்காவின் இந்த தன்னிச்சையான பொருளாதார நெருக்கடி மற்றும் ராணுவ மிரட்டல் காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளதுடன், ஆர்க்டிக் பகுதியில் போர் பதற்றமும் உருவாகியுள்ளது.
