அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், சட்டவிரோதமாகத் தங்கியுள்ள வெளிநாட்டினரை வெளியேற்றும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், மிகவும் ஆபத்தான குற்றவாளிகள் என வகைப்படுத்தப்பட்ட சுமார் 25,000 பேர் கொண்ட பட்டியலை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது.
இதில் 89 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை, பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் போன்ற மிகக் கடுமையான குற்றங்களில் தொடர்புடையவர்கள் அல்லது தண்டனை பெற்றவர்கள் மட்டுமே இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
குறிப்பாக, சட்டவிரோதக் குடியேறிகள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைக் குறிவைத்துத் தொடங்கப்பட்டுள்ள ஆபரேஷன் சேஃப் சிட்டிஸ் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தங்கியிருக்கும் இந்தியர்களிடையே இந்தப் பட்டியல் பெரும் கவலையையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியர்களில் பலர் நிதி மோசடி, வரி ஏய்ப்பு மற்றும் வன்முறைக் குற்றங்களில் ஈடுபட்டவர்களாகக் கூறப்படுகின்றனர்.
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றவாளிகள் அமெரிக்க மண்ணில் தங்கியிருப்பதைத் தவிர்க்கவும் இத்தகைய நாடு கடத்தும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக டிரம்ப் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
மிக மோசமான குற்றங்களில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கண்டறிந்து வெளியேற்றும் அரசின் இந்தத் திட்டவட்டமான முடிவு, அமெரிக்க வாழ் இந்திய சமூகத்தினர் மற்றும் சட்டவிரோதக் குடியேறிகள் மத்தியில் ஒருவித அச்சத்தை உருவாக்கியுள்ளது.
